மெல்ல ஒலிக்கிறது ஓர் குரல். ஓ! என் மனமே. என்ன ஒரு அழகான குரல் உனக்கு !!! . எனும்போது அப்படியே வர்ணிக்கிறது அப்பா என்னும் கவிதையை. இப்போது நான் வேறு என் மனம் வேறு என்றானது.
மனம் மெல்ல பேசுகிறது
வழி தெரியாமல் நின்ற உனக்கு கலங்கரை விளக்கம் அவர். தூரமாய் நின்று பார்க்கையில் கண்களை அலங்கரித்து விட்டு உள்ளே எரிவதை மறைத்து விடுகிறார்.
கொஞ்சம் ஆழமாக யோசித்துப்பார்
கொஞ்சம் கொஞ்சமாக உயரும் கடல் மட்டத்தை போல வளரும் விலைவாசி ஏற்றத்தை எப்படி சமாளிப்பார்.?
பாழாய் போனவன் ஏதாவது நல்ல சேலை இருக்கா நல்லது கெட்டதுக்கு செல்லும் போது இப்படியேவா போக முடியும் என்ற அம்மாவின் வசைபாடுதலுக்கு மத்தியிலும், என் பிள்ளையை ராணி மாதிரி வளர்த்தேன் என்று குடும்ப பெருமை புகழ் பாடும் பாட்டிக்கு மத்தியிலும், தனக்கென ஏதும் விரும்பாமல் ஏதோ ஓர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சில நேரங்களில்
" பாரம் தாங்காமல்
இரவு நேரங்களில்
மழைத்துளிகளை விடுவித்து விடுகிறார் "
சம்பாத்தியம் , செலவு , குழந்தைகள் என கடிகார முள்ளில் செலவழிக்கும் அப்பாவுக்கு அது ஓர் இயந்திர வாழ்க்கை . அவ்வப்போது இயந்திரத்தால் நசுக்கப்பட் அவரின் சிரிப்புக்கு பலரிடம் இருந்து " அந்த ஆளு அப்படித்தான்" என்ற வெகுமதியும் கிடைக்கும்.
தனக்கென பாதைகளை வகுத்துக்கொண்டு நடந்து செல்லும் நதி அப்பா. ஒருபோதும் அவர் அணை மீறியதே இல்லை.
அரசாங்க விடுமுறையானாலும் அவர் உழைக்க தவறியதே இல்லை. யாரும் தடுத்தும் இல்லை. ஏனெனில் எங்கள் பொருளாதாரம் அப்படி.
விரைவாய் நகர்கிறது அவர் அறுபது வயது. ஆனாலும் பயனில்லை. மாற்றமில்லா வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கும் சாவி அப்பா
சில அப்பாக்களின் முறைகள் தனி . ஏனெனில் நியூட்டனின் மூன்றாம் விதி அங்கும் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
மனதின் உரை இனியும் தொடரும்
காத்திருப்போமே
Comments
Post a Comment