கந்த சஷ்டி நாள் 1
முருகன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஏதும் இல்லை. இருந்தாலும் இங்கே வானின் வட்ட நிலவோடு ஒப்பிட்டு முருகனின் அருள் முகம் காட்டப்படுகிறது. குமரன் அந்த அழகன் குற வள்ளியோடு குன்றம் ஏறி நிற்கும்
அழகை காண பக்தரின் கண்கள் ஏங்கி நிற்கும். இந்த பார்வை முருகனோடு நாம் கொண்ட அந்த தெய்வீக உணர்ச்சியை விளக்கும். முருகனை குழந்தையாக , குமாரனாக , குருவாக , அனைத்துமாக எண்ணி பாடியவர்கள் எத்தனையோ பேர் உண்டு . வேதம் ஓதி பொருள் விளக்கும் பரம குருநாதனாக நாம் அவரை ஏற்றுக்கொண்டுள்ளோம் . ஒரு குழந்தைக்கு கால் சிலம்பு இட்டவுடன் என்ன செய்யும். அந்த ஒலியை அவ்வப்போது ஏற்படுத்தி நம்மை திசை திருப்பும் அதுபோல அருணகிரியாரை தன் பாத சிலம்புகளால் ஈர்த்து முதல் அடியை எடுத்துக்கொடுத்தது பாட சொன்னவன். முருகனை நீங்கள் நேரில் கண்டால் பாடல் பாடுவீர்களா ? ஆம் யார் தான் பாடாமல் இருப்பார். அந்த மூடனுக்கும் பாட்டு வரும் . இன்றிலிருந்து தொடங்குகிறது ஆறு நாள் விரதம். நாம் வேண்டுவது என்ன வென்றால் ஆறாம் நாள் முடிவில் எப்படி அந்த சூரபத்மனை வீழ்த்தி ஆட்கொண்டானோ அதுபோல நம் மன அரக்கனை அழித்து நம் வாழ்வு வளம் பெற செய்ய வேண்டும் என்பதே ஆகும் . வாருங்கள் தொடங்குவோம் ஆறு நாள் விரதத்தை. என்றென்றும் அந்த வேலவன் துணை இருப்பான்.
ஓம் சரவண பவ
வானில் மிதந்து தவழும்
வட்ட நிலவின் வண்ணமோடு
அழகென்ற வேலவா ,
குறத்தியோடு குன்றம் ஏறிய குமார
முக்திக்கு வழி அளிக்கும் கந்தா !!
வேலேந்தி வந்திடுவாய் ....
வேதம் ஓதி
பொருள் விளக்கிட்ட
எந்தன் குருவே ...
பாதச் சிலம்பொலி
பாடலுக்கு இசை கொடுக்க
அடியெடுத்தாய் ....
அருணகிரி பாடினார் உன் அழகை
என் போல் மூடனும்
பாட்டிசைப்பான் - உன்னை
நேரில் காண ....
தொடங்கியது விரதம்
ஆறாம் நாள் குறித்தாய்
அந்த அசுரனுக்கு - அதுபோல
மன அசுரம் போக்கிடு
கந்த சஷ்டி நாள் 2
கந்த சஷ்டி இரண்டாம் நாள் விரதத்தை ஆரம்பிக்க நாம் செய்ய வேண்டியவை என்ன ? மற்றும் அதன் வழிபாட்டு முறைகள் பற்றி அறிந்து கொள்வோம்
1) இறைவனை முழு மனதோடு நினைத்து பூஜை செய்ய வேண்டும்
2) பூஜை செய்யும் போது நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்
3) விக்கிரகம் வைத்திருப்பவர்கள் விபூதி அபிஷேகம் செய்தால் நல்லது
4) காலை , மாலை என இரு வேளைகளிலும் கோவிலுக்கு சென்று வரலாம்
5) ஓம் சரவண பவ என்னும் மந்திரத்தை கூறலாம் ( 18 முறை )
உன்னைப் புகழும் பாக்கியம் எனக்கு இல்லை. ஏனெனில் உன் புகழ் பாடியே நாள் முழுதும் வாழும் நின் அடியாரின் இருப்பிடமும் அறியாதவன் நான். சுத்த வெண்ணீறு பூசி உன் நாமம் பாடும் பக்தனை நான் கண்டதில்லை. உனக்கு பிடிக்குமென தினம் ஒரு மலர்கள் கொய்து நீராடி வழிபாடும் அன்பரும் அல்ல நான். உலக இன்பத்தை விட்டு உன் ஆடி சேர்ந்தாரின் நிழல் கூட பட்டதில்லை என் மேல் .மலையை வளம் வந்ததும் இல்லை. என் குமரா ! . அதோ வருகிறார்கள் என் வினைப்பயனின் தூதர்கள். வந்துவிட்டனரே என்று கலங்கும் வேளையிலே முன்னின்று மயில் மீது , வேலொடு வினை களைய வந்தாயப்பா ... தேவர்களும் முனிவர்களும் விரும்பி வணங்கும் தெய்வம் அல்லவா நீ !!! என் பிழை பொறுத்து அருளிட நீ கண்ட போதே கண்களில் அருவிதான் . பரமனுக்கு அருளிய திருப்பரங்குன்ற பெருமானே
வாராயோ வாராயோ
வள்ளி மணவாளா
திருநாள் இரண்டு கண்டிட
முன்னிற்று காக்கும் முத்துக்குமரா
வேல் பிடித்து விளையாடி வினை தீர்ப்பாய்
எந்தன் வளமைக்கு
தோள் தருவாய்
நால்வேதம் ஓதும் பிரம்மனும்
பாற்கடல் வாசம் கொள்ளும் பெருமாளும்
முத்தொழிலுக்கு முதலானவனும்
விரும்பி வணங்கும்
எங்கள் குல நாயகனே
கண்டால் போதும்
கண்ணில் பெருகாதோ நீர்
பரங்குன்றம் ஆளும் எங்கள் பெருமானே
மலரடியே போற்றி !!! போற்றி !!!
Comments
Post a Comment